மாவட்ட செய்திகள்

நீலகிரியில் மோட்டார் வாகன விதிமுறைகள் அமலுக்கு வருகிறது

வருகிற 2-ந் தேதி முதல் நீலகிரியில் மோட்டார் வாகன விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

ஊட்டி

வருகிற 2-ந் தேதி முதல் நீலகிரியில் மோட்டார் வாகன விதிமுறைகள் அமலுக்கு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மாற்றங்கள் செய்யக்கூடாது

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பின்படி அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அல்லது மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மோட்டார் வாகன சட்டத்தின் படி கீழ்கண்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளது. சொந்த வாகனத்தின் முகப்பில் விதிகளை மீறி பொருத்தப்பட்டு இருக்கும் கொடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வாகனத்தின் முன்புறம் தனது பதவிகளை கொண்ட போர்டுகள் வைத்திருப்பின், அதையும் அகற்ற வேண்டும். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி கொடியை பொருத்திக் கொள்ள விதிவிலக்கு உண்டு.

தங்களது சொந்த வாகனத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் அல்லது அமைப்பின் தலைவர்கள் புகைப்படம் வாகனத்தின் உள்ளே பார்த்தவாறு மட்டும் இருக்க வேண்டும். வெளிப்புறத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாதவாறு இருத்தல் வேண்டும். வாகனத்தின் உரிமையாளர், அவர்களது வாகனத்தில் வண்ண விளக்குகள், கண்கூசும் தன்மை கொண்ட அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள், அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்கள் போன்ற மாற்றங்கள் செய்யக்கூடாது.

விதிமுறைகள் அமல்

வாகனங்களில் இடது மற்றும் வலது பக்கம் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் கண்டிப்பாக வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட 40 சதவீதம் மட்டும் குளிர்விக்கும் கண்ணாடி பொருத்திக் கொள்ளலாம். வாகனங்களில் முன்னும், பின்னும் பொருத்தப்படும் பதிவு எண் அரசால் நியமிக்கப்பட்ட வடிவம் மற்றும் எழுத்துக்கள் கொண்டு தெளிவாக இருக்க வேண்டும். வேறு எந்தவிதமான வடிவம் மற்றும் எழுத்துகளில் இருக்கக்கூடாது.

மேற்கண்ட விதிமுறைகள் அனைத்தும் நீலகிரி மாவட்டத்தில் வருகிற 2-ந் தேதி முதல் முழுமையாக எந்த விதிவிலக்கும் இன்றி அமலுக்கு வருகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.