சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர எங்கே விடுவது? என தி.மு.க.-அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாதாள சாக்கடை
சத்தியமங்கலம் நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. பாதாள சாக்கடையில் வரும் கழிவு நீரை சுத்திகரிக்க கோட்டு வீராம்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றங்கரையில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. அங்கு இருந்து கழிவுநீர் ஆற்றில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் அதற்கு சுகாதாரக்கேடு ஏற்படும் என்று கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சத்தி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
ஆணையாளர் சரவணக்குமார், சத்தி தாசில்தார் ரவிசங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய நிர்வாக செயற்பொறியாளர், தன்னார்வலர் கோவையை சேர்ந்த மணி சுந்தரம், கோபியை சேர்ந்த பவானி நதி பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் சத்தியசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
வாக்குவாதம்
கூட்டத்தில் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி உள்பட கவுன்சிலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என அனைவருமே சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பவானி நதியில் கலக்கவிடமாட்டோம் என ஒருமித்த கருத்துடன் உறுதி கூறினார்கள்.
அப்போது உங்களுடைய ஆட்சியில்தான் ஆற்றில் கழிவுநீர் கலக்க முடிவு எடுக்கப்பட்டது என தி,மு.க. வினரும், அ.தி.மு.க. வினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி புகார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் கூட்டத்தில் அமளியும், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார். மேலும் கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்துவதா?, அல்லது வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதா? என்று அரசிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று கூட்டத்த முடித்து வைத்தார்.