மாவட்ட செய்திகள்

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பவானி

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பவானி நகராட்சியின் சார்பில் சொத்துவரி சீராய்வுக்கான முதல் அவசர கூட்டம் நகர் மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மணி முன்னிலை வகித்தார். இதில் மொத்தம் 25 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பவானி நகரத்தில் சொத்துவரி சீராய்வு செய்வதற்கான விவாதம் நடைபெற்றது

ஆனால் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர் தங்கமணி தலைமையில் மொத்தம் 5 பேர் வெளிநடப்பு செய்தனர். மேலும் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி விதிப்புக்கு எதிராக கோஷம் போட்டனர்.

கூட்டரங்கில் விவாதம்

தொடர்ந்து கூட்டரங்கில் சொத்துவரி குறித்து விவாதம் நடந்தது. இதுகுறித்து நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் சுப்பிரமணி (தி.மு.க):- வரி மதிப்பீடு செய்யும் போது அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமல் மதிப்பீடு செய்ய வேண்டும். சுய மதிப்பீடு படிவம் கொடுத்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்ய வேண்டும்.

கவுன்சிலர் துரைராஜா (கொ.ம.தே.க) :- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தொழில்கள் முடக்கப்பட்ட நிலையில் 100 சதவீத வரி விதிப்பு சாத்தியமா?. நகராட்சி பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 7 டன் குப்பைகளை எரித்து 10 கிலோ அளவுக்கு சாம்பலாக்கும் ரூ.1 கோடி மதிப்பிலான அதி நவீன எந்திரத்தை பயன்படுத்தி பவானி நகரை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கவுன்சிலர் சந்தோஷ் (தி.மு.க.):- கோடைகாலம் தொடங்க உள்ளதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் சரி செய்ய வேண்டும். இதே கோரிக்கையினை வலியுறுத்தி 20-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கல்பனா, 14-வது வார்டு உறுப்பினர் சுமதி ஆகியோரும் பேசினர்.

நடவடிக்கை

பின்னர் நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் கூறும்போது, அரசு அறிவித்தபடி அனைவருக்கும் நியாயமான முறையில் அளவீடு செய்து முறையான வரி மதிப்பீடு செய்யப்படும். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

அதன்பின்னர் நகராட்சி ஆணையாளர் தாமரை கூறும்போது, பொதுமக்களுக்கு மதிப்பீட்டு படிவம் கொடுத்து வரி மதிப்பீடு செய்யப்படும் என்றார். கூட்டத்தில் பொறியாளர் பழனிச்சாமி, நகராட்சி மேலாளர் தங்கராஜ், வருவாய் ஆய்வாளர் ரவி, சுகாதார அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.