மாவட்ட செய்திகள்

நச்சலூர், குளித்தலை பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: சாகுபடிக்கு தயாரான வாழைகள் சேதம்- மின் கம்பங்கள் சாய்ந்தன

நச்சலூர், குளித்தலை பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சாகுபடிக்கு தயாரான வாழைகள் சேதம் அடைந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.

நச்சலூர்,

கரூர் மாவட்டம் நச்சலூர், நங்கவரம், பொய்யாமணி, இனுங்கூர், நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி, நெய்தலூர் காலனி, கட்டாணிமேடு, சூரியனூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.

இங்கு நேந்திரம், ராணி பூவன், பூவன், பச்சைலாடன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி உள்ளிட்ட ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. தற்போது, இந்த வாழைகள் அனைத்தும் சாகுபடிக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. காற்று சுழன்று, சுழன்று வீசியதால், தாக்குப்பிடிக்காமல் ஏராளமான வாழைகள் ஓடிந்து விழுந்து சேதம் அடைந்தன.

ஏற்கனவே கொரோனாவின் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இருந்த விவசாயிகளுக்கு இதுமேலும் பேரிழப்பை ஏற்படுத்தியது. மேலும் பொய்யாமணி ஊராட்சி பங்களாபுதூரில் ஒரு மரத்தின் கிளைகள் ஒடிந்து அதன் கீழ் நிறுத்தப்பட்டு இருந்த டிராக்டர் மீது விழுந்தது. இதில் டிராக்டர் சேதமடைந்தது. இதே போல் பொய்யாமணியில் மரத்தின் கிளைகள் ஓடிந்து ஒரு வீட்டின் மீது விழுந்து சேதமடைந்தது. மேலும் மர கிளைகள் மின்கம்பியில் விழுந்ததால் மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. அப்பகுதி மக்கள் மின்சாரம் இன்றி விடிய, விடிய அவதி அடைந்தனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

ஒரு வாழையை குலைக்கும் பருவத்திற்கு கொண்டுவர கூலி, உரம், பூச்சி மருந்து என ரூ.40 வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் வாழை அறுவடைக்க வர 10 மாதங்களுக்குமேல் ஆகிறது. அதுவரை வாங்கிய கடனுக்கு வட்டியும் கூடி விடுகிறது. 10 மாதம் உழைத்து அறுவடைக்கு தயாராக வந்த நிலையில் வாழைகள் சேதம் அடைந்தது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தற்போது, விவசாய பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்க அனுமதி அளித்த நிலையில், எப்படியாவது லாபம் அடைந்து விடலாம், கடனை அடைத்து விடலாம் என்று எண்ணி இருந்த நிலையில், சூறாவளிக்காற்றால் கனவு தகர்ந்துவிட்டது. எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் குளித்தலை பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில்

குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம், ஆரியம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஏராளமான வாழைகள் ஒடிந்து விழுந்தன. பல பகுதிகளில் வாழை அறுவடை செய்யும் தருவாயில் இருந்துவந்தது.

ஆனால் ஊரடங்கையொட்டி சிறு விவசாயிகள் தங்கள் வாழைத்தார்களை அறுவடை செய்து விற்கமுடியாமல் தவித்து வந்தனர். பல இடங்களில் வாழை மரங்களிலேயே வாழை பழுத்துவிட்டன. அதனால் சிறு விவசாயிகள் பலர் நஷ்டமடைந்து இருந்தனர். இருப்பினும் எப்படியாவது வாழைத்தார்களை அறுவடை செய்து விற்றுவிடலாம் என்று விவசாயிகள் எண்ணி இருந்த நிலையில் சூறாவளிகாற்றால் அனைத்து வாழைகளும் ஒடிந்து விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாதிப்புக் குள்ளான வாழை விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.