நாகப்பட்டினம்,
கூட்டத்திற்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 12 மனுக்களும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 236 மனுக்களும் என மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் பழனிசாமி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 465 வீதம் மொத்தம் ரூ.6 ஆயிரத்து 930 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு அவர்களின் கடன் தொகையில் 5 சதவீதம் மானியத்தொகையாக ரூ.20 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தேன்மொழி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.