நாமக்கல்:
பங்குனி உத்திரத்தையொட்டி நாமக்கல்லில் பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. கருங்கல்பாளையத்தில் பால்குட ஊர்வலம் நடந்தது.
தங்ககவச அலங்காரம்
நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம் நடந்தது. மேலும் முருகனுக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன், திருமஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது.
பின்னர் முருகன் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனையும், மாலையில் சாமிக்கு சந்தன காப்பும் சாத்தப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு பங்குனி உத்திரத்தையொட்டி 15 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பால்குட ஊர்வலம்
மேலும் நாமக்கல் அருகே பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கரையான்புதூரில் உள்ள கருமலை தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக கருங்கல்பாளையம் பகுதியில் இருந்து கருமலை முருகன் கோவிலுக்கு பால்குடங்களுடன் ஏராளமான பெண்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். பின்னர் தண்டாயுதபாணி, மயில் வாகனம், நவகிரக மூர்த்திகள், இடுப்பன், அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் சாமிகளுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.