தஞ்சாவூர்:-
தஞ்சை பெரிய கோவிலில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா நாளை நடக்கிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
தஞ்சை பெரியகோவில்
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, ஆயிரம் ஆண்டு கால தமிழ் மக்களின் கலை, பண்பாடு, சமயம், நாகரிகம் ஆகியவற்றின் உறைவிடமாகவும், ஆடல் வழியில் இறைவனை போற்றும் நெறியில் மிக முக்கிய அங்கமாக விளங்கும் தலமாகும்.
தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 19-வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் இந்த நாட்டியாஞ்சலி விழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு தொடங்கி நாளை மறுதினம் அதிகாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
200 நடன கலைஞர்கள்
இந்த ஆண்டு பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் உதவியுடன் நாட்டின் புகழ்பெற்ற நடன கலைஞர்களான சென்னை மீனாட்சி சித்தரஞ்சன், சித்ரா முரளிதரன், விஜயம் கார்த்திக், கோவை ஜெயந்தி ராமசந்திரன், பெங்களூரு அணில் ஐயர், சுபர்ண வெங்கடேஷ், அஞ்சனா குப்தா, ஐதராபாத் சுரேந்திரநாத், மும்பை ஹரி கல்யாணசுந்தரம், ரேவதி சீனிவாசராகவன், தஞ்சை. சந்திரசேகரன் கிட்டப்பாபிள்ளை உள்ளிட்ட பல நடன கலைஞர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இவ்விழாவில் திரளான பக்தர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்வினை கண்டுகளிக்குமாறு பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் டாக்டர் வரதராஜன் மற்றும் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.