மும்பை,
கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள் பற்றி கருத்து கூற முடியாது என கிரித் சோமையா கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் மந்திரிகள்
பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அஜித்பவார், சகன் புஜ்பால், சுனில் தட்காரே, ஹசன் முஷ்ரிப் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியவர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கும் அடிக்கடி செல்வார். குறிப்பாக அஜித்பவார் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்வார் என பலமுறை கூறியுள்ளார். இந்தநிலையில் கிரித் சோமையா ஊழல் குற்றச்சாட்டு கூறிய அஜித்பவார் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் இணைந்து மந்திரிகளாக பதவி ஏற்று உள்ளனர்.
கிரித் சோமையா கருத்து
சமீபத்தில் கிரித் சோமையாவிடம் பா.ஜனதா கூட்டணி அரசில் அஜித்பவார் இணைந்தது குறித்து கருத்து கேட்ட போது பதில் சொல்லாமல் சிரித்தபடி சென்றார். இந்தநிலையில் நேற்று கிரித் சோமையா நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து கூறுகையில், "அவர்களுக்கு (அஜித்பவார் உள்ளிட்டவர்கள்) எதிராக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே அதுகுறித்து தற்போது கருத்து கூறுவது சரியாக இருக்காது. நான் எனது கடமையை செய்தேன். நான் ஒழுக்கமான கட்சி தொண்டன்" என்றார்.