மாவட்ட செய்திகள்

ஆர்.கே.பேட்டை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள்- கன்டெய்னர் லாரி மோதல்; மாணவர் பலி டிரைவர் கைது

ஆர்.கே.பேட்டை அருகே முன்னால் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அமிர்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சந்தோஷ் (வயது 19). இவர் திருவண்ணாமலையில் உள்ள அரசு கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்சி. வேளாண்மை முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் சந்தோஷ் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு விடுமுறை என்பதால், அமிர்தாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

பின்னர், மாலையில் தனது பள்ளிக்கூட நண்பனை பார்ப்பதற்காக ஆர்.கே.பேட்டைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆர்.கே.பேட்டை அருகே உள்ள சந்தான வேணுகோபாலபுரம் சமத்துவபுரம் வந்த போது, முன்னால் சென்று கொண்டு இருந்த பஸ்சை சந்தோஷ் முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி மீது மோட்டார்சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்தார். உடனே படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் அவசரமாக மீட்டு, சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சந்தோஷின் தந்தை பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்து கதறி அழுதார். இது காண்போரை கண்கலங்க வைத்தது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான திருத்தணியை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் ரவி (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.