மாவட்ட செய்திகள்

தென்காசி அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; நகைக்கடை உரிமையாளர் பலி

தென்காசி அருகே கார்- மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அச்சன்புதூர்,

கடையநல்லூர் பேட்டை ரைஸ்மில் தெற்கு தெருவை சேர்ந்தவர் நத்கர் பாவா (வயது 75). இவர் கடையநல்லூர் பேட்டை பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இவருக்கு 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் நத்கர் பாவா நேற்று முன்தினம் இரவு வியாபாரம் தொடர்பாக தென்காசிக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். தென்காசி அருகே ஈனா விலக்கு பகுதியில் சென்றபோது கோவில்பட்டியில் இருந்து குற்றாலம் நோக்கி வந்த காரும், அவரது மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு நத்கர்பாவா பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை நத்கர் பாவா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி ஜோதிநகரை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் விமல் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.