கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரும்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சப்இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற கார் ஒன்றை அவர்கள் மடக்கி சோதனை செய்தனர்.
மேற்கண்ட காரில் 50 கிலோ எடை கொண்ட மொத்தம் 14 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த எடை 700 கிலோ ஆகும். போலீஸ் விசாரணையில் சென்னை பெரம்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டைக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார், காரை ஓட்டிச்சென்ற பெரம்பூரை சேர்ந்த டிரைவர் ஜான்பாஷாவை (28) கைது செய்து விசரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.