மாவட்ட செய்திகள்

‘நீட்’ தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் ஓய்வுபெற்ற ஆசிரியர் கழக மாநில மாநாட்டில் வலியுறுத்தல்

‘நீட்’ தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில மாநாட்டில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில மாநாடு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் கோகுல்நாத் பாபு தலைமை தாங்கினார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தொடக்கவுரையாற்றினார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி வாழ்த்தி பேசினார். கல்லூரிக்கல்வி இயக்குனர் மஞ்சுளா, முன்னாள் இயக்குனர் அனந்தநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புதிய ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும். திருத்திய ஓய்வூதியத்தை 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் வழங்க வேண்டும். மாநில அரசின் அதிகார வரம்புக்குள் கல்வியை கொண்டு வர வேண்டும். நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு உடனடியாக ஊதிய திருத்த ஆணையை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் மாநில தலைவர் தாமஸ், பொதுச்செயலாளர் பெருமாள், அமைப்பாளர் ஜூலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.