நெல்லை,
நெல்லையப்பர், குற்றாலநாத சுவாமி கோவில்களில் திருவாதிரை திருவிழாவையொட்டி நடராஜரின் ஆருத்ரா தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சிவபெருமான் திருநடனம் புரிந்த சபைகளில் நெல்லையப்பர் கோவிலானது தாமிரசபையாக விளங்குகிறது. குற்றாலம் குற்றாலநாதர் கோவிலானது சித்திரசபையாக உள்ளது.
இதில் குற்றாலம் சித்திரசபையில் இறைவனின் திருநடனம், திருவிளையாடல்கள் குறித்து அற்புதமான மூலிகை ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
பழமைவாய்ந்த இந்த இருதிருத்தலங்களிலும் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழா சிறப்பு வாய்ந்தது.
நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா கடந்த 2ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. அதிகாலையில் திருவெம்பாவை வழிபாடு நடந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு சுவாமி சன்னதி 2வது பிரகாரத்தில் உள்ள தாமிர சபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு நடராஜரின் தாண்டவ தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சாத்தையா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அழகிய கூத்தர் கோவில்
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் செப்பறைக்கோவில் என்ற அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலிலும் கடந்த 2ந் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்மாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து நடராஜர் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, தக்கார் முருகன் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் கடந்த 2ந் தேதி திருவாதிரை திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் சுவாமிஅம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற்றது. கடந்த 6ந் தேதி தேரோட்டம் நடந்தது. 9ந் தேதி சித்திர சபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
நேற்று காலை 4 மணிக்கு சித்திர சபையிலும், 5 மணிக்கு திரிகூட மண்டபத்திலும் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் லட்சுமணன், தக்கார் சாத்தையா, கோவில் நிர்வாக அதிகாரி கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி, சுவாமி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர் வீதி உலாவும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.
கரிவலம்வந்தநல்லுர் பால்வண்ணநாத சுவாமி கோவிலிலும், நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் நேற்று அதிகாலையில் நடராஜருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடந்தது.