செய்திகள்

டாக்டர் உள்பட மேலும் 15 பேர் பாதிப்பு: நெல்லையில் கொரோனாவுக்கு பெண் பலி

நெல்லையில் நேற்று கொரோனாவுக்கு பெண் பலியானார். டாக்டர் உள்பட மேலும் 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி, தென்காசியில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினத்தந்தி

நெல்லை,

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்தும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வருபவர்களாலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாலும் நெல்லையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டி விட்டது.

நேற்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் நெல்லை மகாராஜநகர் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கும், மேலப்பாளையம் வசந்தாநகரை சேர்ந்த ஒரு வயது குழந்தைக்கும், அதன் தாய்க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், நெல்லை கலெக்டர் அலுவலக கட்டிட தொழிலாளி ஒருவர், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 4 பேர், பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர மும்பையில் இருந்து வந்த பாப்பாக்குடியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரும், குஜராத்தில் இருந்து வந்த உக்கிரன்கோட்டையை சேர்ந்த 2 பெண்களும் இதில் அடங்குவர்.

பெண் பலி

இவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் தங்கி இருந்த பகுதிகள் கொரோனா தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 522 ஆக உயர்ந்தது. இவர்களில் 394 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 127 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் இறந்து உள்ளார்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை சேர்ந்த 64 வயது மூதாட்டிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தது. மேலும் அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சீறுநீரக கோளாறு இருந்தது. இதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று காலை அந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். உடனே ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவருடைய உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி கொடுத்தனர். பின்னர் அவரது உடல் பரப்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் நெல்லையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

தென்காசியில் 5 பேருக்கு தொற்று

தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள். 2 பேர் தென்காசி, லட்சுமிபட்டி பகுதியை சேர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில் இதுவரை 162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 97 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 65 பேர் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 437 ஆக இருந்தது.

மேலும், கொரோனா அறிகுறியுடன் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேருக்கும், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த 2 பயிற்சி டாக்டர்கள், தூத்துக்குடி பிரையண்ட்நகர், முத்தம்மாள்காலனி, கோரம்பள்ளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்பட 25 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 50 பேர் பாதிப்பு

இதனால் நேற்று ஒரே நாளில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் முலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 487 ஆக உயர்ந்து உள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை