ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் செக்சன் 17 பிரிவு ஜென்ம நிலம் (ஜமீன் நிலம்) ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஒரு பகுதி நிலத்தில் தனியார் தேயிலை எஸ்டேட் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தேயிலைத் தோட்டங்கள், ஏலக்காய் போன்றவை பயிரிடப்பட்டு உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1975-ம் ஆண்டு தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலத்துக்கு பட்டா வழங்க கோரி நில வரி திட்ட அலுவலரிடம் மனு தாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி ஆனது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை பல கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்த மாதம் 5-ந் தேதி இந்த மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவில் தனியார் தேயிலை எஸ்டேட் நிறுவனம் பயன்படுத்தி வரும் 1,760 ஏக்கர் நிலத்தில், 1,700 ஏக்கர் நிலத்துக்கு கூடலூர் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்க வேண்டும். மீதமுள்ள 60 ஏக்கர் நிலம் வனப்பகுதியாக உள்ளதால் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யுமாறும் உத்தரவிட்டது.
கடந்த 45 வருடங்களாக நடந்து வந்த மனு விசாரணை தற்போது ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ் கூறும்போது, கூடலூர் பகுதியில் செக்ஷன்-17 நிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மற்றும் பழங்குடியினர் வசித்து வரும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. சாலை வசதிகளும் இல்லை. இதனால் வனவிலங்குகள் நடமாடும் அச்சத்திற்கு மத்தியில் அவர்கள் இருளில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.