கொடைக்கானல்,
கொடைக்கானலை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 45). நேற்று மதியம் இவர், கே.ஆர்.ஆர். கலையரங்கம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் முனியாண்டியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.550-ஐ பறித்தனர். பின்னர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முனியாண்டி கொடைக்கானல் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையிலான போலீசார் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஏரிச்சாலை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 4 வாலிபர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்தவுடன் 2 பேர் தப்பியோடி விட்டனர். 2 பேர் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர். விசாரணையில் அவர்கள், பெரியகுளம் வடகரையை சேர்ந்த முகமது பைசூல் (19), மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் முனியாண்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.