வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடிதெற்கு யாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் பாமா (வயது75), கோதண்டபாணி (65). இவர்களின் கூரை வீடுகள் அருகருகே உள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை இந்த 2 பேரின் வீடுகளிலும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். இதில் அதே ஊரை சேர்ந்த கனகசுந்தரம் என்பவர் காயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும் எரிந்து சாம்பலானது.
ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்
இந்த தீவிபத்தில் 2 வீடுகளிலும் இருந்த தளவாட பொருட்களும், 25 நெல் மூட்டைகளும் எரிந்து சேதம் அடைந்தன. மேலும் கோதண்டபாணி வீட்டில் இருந்த ஒரு ஆட்டுகுட்டியும் உயிரிழந்தது. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்தில் காயம் அடைந்த கனகசுந்தரம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுபற்றி தகவல் அறிந்த வேதாரண்யம் வருவாய் ஆய்வாளர் ஸ்டான்லிராஜ், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்காஞ்சிதரன் ஆகியோர் நேரில் சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு அரசு நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.