செய்திகள்

ஆப்கானிஸ்தான் எதிர்கட்சி தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் தாக்குதல் - 32 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் எதிர்கட்சி தலைவர் பங்கேற்ற கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் அஷ்ரப் கானி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்றுள்ளார். அவரை எதிர்த்து அந்நாட்டின் முன்னாள் தலைமை நிர்வாகி அப்துல்லா அப்துல்லா போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், அந்நாட்டின் காபூல் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எதிர்கட்சி தலைவரான அப்துல்லா அப்துல்லா இன்று பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அப்துல்லா உரையாற்றிக்கொண்டிருந்தபோது அந்த கூட்டத்தை குறிவைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த கோர தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக அப்துல்லா உயிர்தப்பினார். இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

அமெரிக்காவுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடந்த வாரம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தங்களுக்கு பின்னர், தலைநகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.