மும்பை
சமீபத்தில் மராட்டிய பாஜக முதல்வர் பட்னாவிஸ் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். சுமார் 36.10 லட்சம் விவசாயிகளின் ரூ.34,000 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு அதன்படி கடன்களும் தள்ளுபடி ஆகிவருகின்றன.
இது தொடர்பாக முதல்வர் தனது ட்வீட் பதிவில் மாவட்டவாரியாக எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்ற விவரத்தை பதிவிட்டுள்ளார். இதில் மும்பை நகரில் 694 விவசாயிகளும் இடம் பெற்றுள்ளனர். அது தவிர மும்பையின் புறநகர் பகுதியில் 119 பேரும் பட்டியலில் உள்ளனர். இத்தகவல் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை நகரம் மிக அதிகமான மக்கள் அடர்த்தியுள்ள நகரமாகும். இங்கு மக்கள் வசிக்கும் நிலப்பகுதியில் எப்படி விவசாயம் நடக்கிறது என்பது பலருக்கும் தெரியவில்லை. ஒரு சில ரயில்வே இருப்புப்பாதைகளின் ஓரங்களிலும், கழிவுநீர் செல்லும் கால்வாய்களின் அருகிலும் சிறிய நிலப்பரப்புக்களில் நடக்கலாம். இதில் இத்தனை விவசாயிகள் உள்ளனரா? என்ற ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.
முதல்வரின் அலுவலகம் மேலும் குறிப்பிடுகையில் இந்தக் கடன் தள்ளுபடி ரூ.1.5 லட்சம் வரை விவசாய கடன் பெற்றுள்ள விவசாயிகளின் நிலுவைகளே தள்ளுபடியாகும் என்று கூறியுள்ளது.