செய்திகள்

வரி செலுத்தாத 84 கடைகளுக்கு சீல் வைப்பு; ஆணையாளர் தகவல்

திருவண்ணாமலை நகராட்சியில் வரி செலுத்தாத 84 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் கூறினார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சியில் சொத்துவரி ரூ.8 கோடி பாக்கி உள்ள நிலையில் ரூ.3.12 கோடியும், குடிநீர் கட்டண பாக்கி ரூ.8 கோடியில் ரூ.1 கோடியும், குத்தகை இன வாடகை தொகை ரூ.10 கோடியில் ரூ.3 கோடியும், பாதாள சாக்கடை கட்டண பாக்கியில் ரூ.2 கோடியில் ரூ.13 லட்சமும் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.

மாதந்தோறும் குடிநீர் வழங்கல், தெருவிளக்கு மற்றும் பாதாளசாக்கடை ஆகியவற்றிற்கான மின்சார கட்டணம் சராசரியாக ரூ.80 லட்சமும், ஊழியர்களின் சம்பளத்திற்கு ரூ.1 கோடியும், இதர பராமரிப்பு செலவுகளும், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நகராட்சியின் பங்களிப்பு செலவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை அதிகமாக நிலுவையுள்ளது.

அதனால் திருவண்ணாமலை நகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், உரிமக் கட்டணம் மற்றும் சேவை கட்டணம் ஆகியவற்றில் நிலுவையிலுள்ள வரி பாக்கி வசூல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக நகராட்சியில் 10-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் மூலம் வரி பாக்கி நிலுவையில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. தண்ணீர் வரி நிலுவைக்காக குழாய் துண்டிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த மாதத்தில் நேற்று வரை 66 கடைகள் சீல் வைக்கப்பட்டும், 122 குடியிருப்புகளில் குடிநீர் குழாய்கள் துண்டிப்பு செய்யப்பட்டும் 55 எண்ணிக்கையில் பாதாள சாக்கடை இணைப்பும் துண்டிக்கப்பட்டும் தீவிரமாக வரிவசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர நகராட்சி குத்தகை இனங்களில் வரிபாக்கி உள்ள 18 கடைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாதாள சாக்கடை கட்டணம் செலுத்தாத திருமண மண்டபம் ஒன்றிற்கு திருமணம் நடந்து கொண்டிருந்த போதே குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் கடைகளின் முன்பு நகராட்சி வாகனங்களை நிறுத்தியும், ஜப்தி நோட்டீஸ் வழங்கியும், வாகனங்கள் மூலமாக அறிவிப்பு வழங்கியும் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

நகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் பள்ளிகள் மட்டும் சுமார் ரூ.40 லட்சம் வரிபாக்கி வைத்துள்ளனர். வரி பாக்கி செலுத்தாத பள்ளிக்கூடங்கள் வரி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றத்தால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டும் வரி செலுத்தாத அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சில இடங்களில் சேவை கட்டண முரண்பாடுகள் உள்ளன என்று வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தபோது மேற்கண்ட முரண்பாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வரி வசூலிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இனிவரும் காலங்களில் நகராட்சி வரி நிலுவை பாக்கி தீவிரமாக வசூலிக்கப்படும். மேலும் நகராட்சியின் சீரிய சேவை பொதுமக்களுக்கு தொடர்ந்து கிடைத்திட, தேவையற்ற மனக்கசப்பை தவிர்த்திட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நிலுவையின்றி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த தகவலை திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்