கீரமங்கலம்,
கஜா புயலில் புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங் களில் லட்சக்கணக்கான தென்னை, மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், புளி என்று அனைத்து வகையான பழமையான மரங்கள் கூட சாய்ந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கவலையில் உள்ளனர். ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் முடிந்துவிட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
அதேபோல சாலை ஓரங்களிலும், கிராமங்களின் பொது இடங்களிலும் நின்ற மரங் களும் புயலில் காணாமல் போனது. இந்த நிலையில் தான் அந்தந்த கிராம இளைஞர்கள், தன்னார்வ இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து பொது இடங்களில், நட்டு வளர்க்க தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கோகுலகிருஷ்ணன் புதிய முயற்சியாக கிராமங்களில் அழிந்த மரங்களையும், பசுமையையும் மீட்டெடுக்கும் முயற்சியாக தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், பாலையூர் ஆகிய கிராமங்களில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், நர்சரி அமைத்து மா, பலா, கொய்யா, மாதுளை, வேம்பு, புளி, சப்போட்டா, புங்கன் என பல வகையான பலன் தரும் பழ மரக்கன்றுகளை உற்பத்தி செய்து 48 ஊராட்சிகளிலும், பொது இடங்களில் நடவு செய்து வருகிறார்.
இதற்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெண்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பல லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து வளர்க்கவும் திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கூறுகையில், நான் ஆணையராக பொறுப்பேற்ற சில நாட்களில் கஜா புயல் ஒட்டு மொத்த கிராமங்களையும் புரட்டிப் போட்டுவிட்டது. மரங்கள் அழிந்து போனது. அதனால் கஜா புயலில் அழிந்த மரங்களை மீண்டும் வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2 இடங்களில் நர்சரி அமைத்து பழ மரக்கன்றுகள், நீண்ட காலம் நிழல் தரும் மரக்கன்றுகளை உற்பத்தி செய்துள்ளோம்.
இந்த கன்றுகள் மூலம் கொத்தமங்கலம், நெடுவாசல் மேற்கு, நகரம் ஆகிய கிராமங்களில் முதல் கட்டமாக பழத்தோட்டம் அமைக்க திட்டமிட்டு நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மற்ற ஊராட்சிகளிலும் அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. அதே போல ஊராட்சி சாலை ஓரங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இன்னும் நடவு செய்ய வேண்டியுள்ளது. நடப்படும் மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க நூறு நாள் திட்ட பணியாளர்கள் செய்து வருகிறார்கள். திருவரங்குளம் ஒன்றியத்தில் இழந்த மரங்களை மீட்பது ஒரு பக்கம் பசுமை ஒன்றியமாக மாற்றுவோம். அதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள், கிராம மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இப்போது நடப்படும் மரக்கன்றுகள் வளர்ந்து ஊராட்சி மக்களுக்கு பலனும், ஊராட்சிக்கு வருமானமும் கிடைக்க வேண்டும் என்றார்.
இதே போல ஒவ்வொரு ஊராட்சியிலும் செயல்படுத்தினால் புயலில் இழந்த மரங் களையும், பசுமைகளையும் சில ஆண்டுகளிலேயே மீட்டெடுக்க முடியும் என்றார்.