வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் சிமெண்டு ஆலைகளின் கனரக வாகனங்களால் தொடர் விபத்து நடைபெற்று வருகிறது. இதில் பலர் படுகாயம் அடைந்ததுடன், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது என்றும், இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வி.கைகாட்டியில் நேற்று விபத்து விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தொடர் விபத்துக்கான நீதி கேட்டு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் விபத்தினால் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளில் இயங்கும் கனரக வாகனங்களை போலீசார் சோதனை செய்து அந்த வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். சிமெண்டு ஆலைகளுக்கு கனரக வாகனங்கள் மூலம் மூலப்பொருட்களை ஏற்றி வரும் போது கிழியாத தரமான தார்ப்பாய் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
பின்னர் போராட்டக்காரர்கள் தொடர் விபத்து விழிப்புணர்வு பற்றிய 18 அம்ச கோரிக்கைகளை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.