செய்திகள்

ஆலங்குளம் அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி லாரி மீது கார் மோதியது

ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தினத்தந்தி

நெல்லை,

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் அருணாசலம் நகரில் வசித்து வந்தவர் முருகன் (வயது 52). இவரது சொந்த ஊர் நெல்லை மீனாட்சிபுரம் ஆகும். இவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சலவை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மகள்கள் தங்கச்செல்வி, அனுசுபா, மகன் மகேஷ். மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகள் தங்கச்செல்வி நெல்லை சுகாதார பணி துணை இயக்குனரக அலுவலகத்தில் தடுப்பூசி பணிகள் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ராஜசேகர் (35). ஈரோட்டை சேர்ந்த இவர் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு தனிகா (5) என்ற மகள் இருந்தாள்.

இளைய மகள் அனுசுபாவின் கணவர் நிரஞ்சன்குமார் (29). இவர் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் ஆகும். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 1 வயதில் குழந்தை உள்ளது.

முருகனின் மகன் மகேஷ் பாளையங்கோட்டை அருகே வசவப்புரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவருக்கும், நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நேற்று முன்தினம் கொக்கிரகுளத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் இரவு மணமக்கள் கே.டி.சி.நகர் அருணாசலம் நகரில் உள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நேற்று பெண் வீட்டார் வீடு காணும் நிகழ்ச்சிக்காக மாப்பிள்ளை வீட்டுக்கு வருவதாக இருந்தது. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ஆட்டு இறைச்சி விருந்து அளிக்க ஏற்பாடு செய்தனர். இதற்காக ஆட்டு இறைச்சி வாங்குவதற்கு ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்துக்கு செல்வதற்காக நேற்று அதிகாலையில் ராஜசேகரின் காரில் புறப்பட்டனர். காரை ராஜசேகர் ஓட்டினார். அவருடன் முருகன், நிரஞ்சன்குமார், சிறுமி தனிகா, முருகனின் மைத்துனர் களக்காட்டை சேர்ந்த நம்பி என்ற நடராஜன் (58) ஆகியோரும் சென்றனர். நானும் வருவேன் என்று அடம்பிடித்ததால் சிறுமி தனிகாவை அழைத்து சென்று உள்ளனர்.

ஆலங்குளம் அருகே உள்ள கரும்புளியூத்தை தாண்டி தனியார் நர்சிங் கல்லூரி அருகில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் லாரிக்கு அடியில் புகுந்து அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கடப்பாரை, கோடரியால் காரை உடைத்து, பலியானவர்களின் உடல்களை மீட்டனர்.

பின்னர் அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் பலியான முருகன் அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றியதால் ஏராளமான ஊழியர்களும், உறவினர்களும் அங்கு கூடினர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த கோர விபத்து காரணமாக, தென்காசி-நெல்லை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் கணேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் திருமணம் நடந்து மகிழ்ச்சியாக இருந்த வீடு, ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியானதால் நேற்று சோகத்தில் மூழ்கியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்