உத்தமபாளையம்,
உத்தமபாளையத்தில் சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையம், ஒருங்கிணைந்த கோர்ட்டு, தலைமை மருத்துவமனை மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
இதனால் பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உத்தமபாளையத்துக்கு வந்து செல்கின்றனர். இதைத்தவிர தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உத்தமபாளையம் அமைந்து இருப்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். தேனியில் இருந்து கேரள மாநிலம் குமுளி, தேக்கடிக்கு இந்த வழியாகவே சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக, உத்தமபாளையம் பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன. இந்தநிலையில் பைபாஸ் பஸ்நிறுத்தம் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கம்பத்தில் இருந்து வரும் பஸ்கள், தேனியில் இருந்து கம்பம் செல்லும் பஸ்கள் ஒரு வழிப்பாதையில் சென்று வருகின்றன.
உத்தமபாளையத்தில் இருந்து தேவாரம், போடி செல்லும் பஸ்கள் பைபாஸ் பஸ் நிறுத்தம் வழியாகவே செல்கின்றன. அந்த சாலையை விரிவாக்கம் செய்யவில்லை. இதன் காரணமாக 4 திசைகளில் இருந்து வருகிற பஸ், கார், மோட்டார் சைக்கிள்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். எனவே தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில், உத்தமபாளையம் பைபாஸ் பஸ்நிறுத்தத்தில் தானியங்கி போக்குவரத்து சிக்னலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் காலை, மாலை நேரத்தில் அங்கு போலீசாரை நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.