திருப்பூர்,
திருப்பூர் திலகர் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் வேலம்பாளையம் திலகர்நகர், தியாகி குமரன் காலனி, அனுப்பர்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகிறோம். நாங்கள் குழு அமைத்து தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் இருந்து குழுக்கடன் பெற்றுள்ளோம். தவணைத்தொகையை செலுத்தி வந்தோம். தற்போது கொரோனா காலத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் வேலையில்லாமல் வருமானம் இழந்து தவிக்கிறோம். சாப்பாட்டு தேவையை பூர்த்தி செய்யவே சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாங்கள் கடன் பெற்ற தனியார் நுண்கடன் நிதி நிறுவனங்கள், வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் மாதாந்திர தவணைத்தொகையை செலுத்துமாறு வற்புறுத்துகிறார்கள். கடும் நெருக்கடி கொடுத்ததால் வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளோம். கலெக்டர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட பிறகும் வட்டியுடன் தவணைத்தொகையை செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கிறார்கள். எங்களின் குழந்தைகளுக்கு உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் எங்களை வேறு நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக உள்ளது.
ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்யவும், எங்களை மிரட்டும் நுண்கடன் நிதி நிறுவனங்கள், வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.