புதுடெல்லி,
லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் பதற்றம் குறித்தும், தற்போதைய நிலவரம் குறித்தும் முப்படைகள் தலைமை தளபதி மற்றும் படைத்தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, எல்லையில் பதற்றம் நீடிப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும், சீன ராணுவம் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்க தயாராக இருக்குமாறு ராணுவத்துக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், எல்லையில் சீன படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தரை, வான்வெளி, கடல் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ராணுவ உயரதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு படை வாகனங்களுக்கு தேவையான எரிபொருட்களை கூடுதலாக கையிருப்பில் வைக்கும் நடவடிக்கையும் தீவிரம் அடைந்துள்ளது.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிரான சோவியத் வெற்றியை நினைவுபடுத்தும் விதமாக ரஷ்யாவில் நடைபெறும் 75-வது ராணுவ அணிவகுப்பு நிகழச்சியில் கலந்து கொள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ரஷ்யாவிற்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.