பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளியில் உள்ள கங்கொண்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜூ(வயது 28). துமகூரு மாவட்டம் கியாத்தசந்திராவில் வசித்து வந்தவர் சுஷ்மா(வயது 25). இவர்கள் 2 பேரும் முகநூலில்(பேஸ்புக்) நண்பர்கள் ஆனார்கள். 2 ஆண்டுகள் நண்பர்களாக பழகிய அவர்கள் காதலிக்க தொடங்கினர்.
பின்னர், 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சுஷ்மா கர்ப்பம் ஆனார். இதையடுத்து ராஜூவும், சுஷ்மாவும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜூ-சுஷ்மா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையுடன், மனைவி மாயம்
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதியில் இருந்து சுஷ்மாவும், அவருடைய குழந்தையும் வீட்டில் இருந்து மாயமானார்கள். இதையடுத்து ராஜூ அவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தார். ஆனால், எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக சுஷ்மாவின் தாய்க்கு அவர் தெரியப்படுத்தினார். இதுபற்றி சுஷ்மாவின் தாய் கடந்த மாதம்(ஜனவரி) 26-ந் தேதி மாதநாயக்கனஹள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரில், எனது மகள் சுஷ்மா, 3 மாத குழந்தையுடன் மாயமாகி உள்ளார். அவரை தேடிக்கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கைது
இதற்கிடையே, மருமகன் ராஜூவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தனது மகள், பேரன் ஆகியோர் மாயமாகி இருப்பதில் மருமகன் ராஜூ மீது சந்தேகம் இருக்கிறது என்றும் சுஷ்மாவின் தாய் போலீசில் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ராஜூவை பிடித்து விசாரித்தனர். அப்போது ராஜூ தனது மனைவி சுஷ்மா, 3 மாத குழந்தை ஆகியோரை கொலை செய்ததும், சுஷ்மாவின் உடலை அவர் தீவைத்து எரித்ததோடு, குழந்தையின் உடலை புதரில் வீசியதும் தெரியவந்தது. இதைக்கேட்ட போலீசார் ராஜூவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, சம்பவம் குறித்து ராஜூ போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதுபற்றி போலீசார் கூறியதாவது:-
சமூக வலைத்தளங்களில் மூழ்கினார்
ராஜூவும், சுஷ்மாவும் முகநூலில் நண்பர்களாகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சுஷ்மா தொடர்ச்சியாக தனது செல்போனை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக, முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை அவர் அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் தனக்கு தெரியாமல் சுஷ்மா வேறு யாருடனோ பேசி வருவதாக ராஜூவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், சமூக வலைத்தளங்களில் மூழ்கியதால் வீட்டில் சமையல் செய்வது உள்பட எந்த வேலைகளையும் சுஷ்மா செய்யவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ராஜூ, சுஷ்மாவையும், குழந்தையையும் கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, கடந்த 20-ந் தேதி சுஷ்மாவையும், குழந்தையையும் ஹஜ்ஜால்-முத்துராயனபுரா ரோட்டில் உள்ள வனப்பகுதிக்கு ராஜூ மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
கல்லால் தாக்கி கொலை
வனப்பகுதியில் வைத்து கல்லால் சுஷ்மாவின் தலையில் தொடர்ந்து தாக்கி ராஜூ கொலை செய்தார். அதைத்தொடர்ந்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். பின்னர் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். மேலும் குழந்தையின் உடலை புதரில் வீசினார். இதன் தொடர்ச்சியாக போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்கும் வகையில் அவர் சுஷ்மா, குழந்தையுடன் மாயமாகி விட்டதாக கூறி தேடி நாடகமாடி வந்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.
ராஜூவின் வாக்குமூலத்தை கேட்டு சம்பவ இடத்துக்கு சென்று அங்கு எரிந்த நிலையில் கிடந்த சுஷ்மாவின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் சுஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், புதரில் வீசப்பட்ட குழந்தையின் உடலை காணவில்லை. இதையடுத்து குழந்தையின் உடலை போலீசார் தேடிவருகிறார்கள்.