செய்திகள்

88 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியின்றி தேர்வாக உள்ள மும்பை மேயர்

88 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை மாநகராட்சி மேயர் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை மாநகராட்சி தேர்தல் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் வேட்பு மனுதாக்கல் முடிய ஒரு மணி நேரம் இருந்த நிலையில் சிவசேனா சார்பில் மேயர் தேர்தலில் போட்டியிட கவுன்சிலர் கிஷோரி பெட்னேகர் வேட்பு மனு தாக்கல் செய்தார். துணை மேயர் தேர்தலில் போட்டியிட சிவசேனா சார்பில் சுகாஸ் வாட்கர் மனு தாக்கல் செய்தார்.

மேயர் தேர்தலில் வெற்றி பெற தேவையான பலம் இல்லாததால், போட்டியிடமாட்டோம் என ஏற்கனவே பா.ஜனதா அறிவித்து இருந்தது. இதேபோல மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் மேயர் தேர்தல் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் பின்வாங்கியது. வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சிவசேனாவை சேர்ந்த கிஷோரி பெட்னேகரும், சுகாஸ் வாட்கரும் போட்டியின்றி மேயர், துணை மேயராக தேர்வாக உள்ளனர்.

மும்பை மாநகராட்சி மேயராக வரும் 22-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள கிஷோரி பெட்னேகர், பரேல் பகுதியில் 3 முறை கவுன்சிலர் ஆனவர். 57 வயதாகும் இவர் ஜவகர்லால் நேரு துறைமுக கழகத்தில் செவிலியராக பணியாற்றியவர். இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒர்லி தொகுதியில் ஆதித்ய தாக்கரேவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் ஆவார்.

துணை மேயராக தேர்வாக உள்ள சுகாஸ் வாட்கர் மலாடு பகுதியை சேர்ந்த வக்கீல். இவரது தந்தை சந்திரகாந்த் வாட்கரும் கவுன்சிலராக இருந்தவர் ஆவார்.

மும்பை மாநகராட்சி வரலாற்றில் 88 ஆண்டுகளுக்கு பிறகு மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். கிஷோரி பெட்னேகர் மும்பை மாநகராட்சியின் 77-வது மேயராக தேர்வாக உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை