சென்னை,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இறுதி கட்ட தேர்தல் நடைபெற்ற நாளான நேற்றுமுன்தினம் 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பரபரப்பாக வெளியிட்டன.
இதில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணிகள் தான் வெற்றிபெறும் என்று வெளியாகியுள்ளன. அதுபற்றி தங்களின் கருத்து?.
பதில்:- தி.மு.க. கூட்டணி முன்னணியில் இருப்பதில் உங்களுக்கு சந்தோசமா இல்லையா, அதை முதலில் நீங்கள் சொல்லுங்கள். ஊடகங்களில் வரக்கூடிய கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரையில் தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தாலும் ஒருவேளை பாதகமாக வந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதுமில்லை. எங்களைப் பொறுத்தவரையில் தலைவர் கருணாநிதி மிகத் தெளிவாக பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டியிருக்கின்றார். இன்னும் 3 நாட்களில் மக்களுடைய கணிப்பு என்ன என்பது தெளிவாக தெரியப்போகின்றது. அதைத்தான் நாங்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றோம்.
கேள்வி:- மத்தியில் வரக்கூடிய ஆட்சி, எந்த ஆட்சியாக இருந்தாலும் அதில் தி.மு.க. அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?.
பதில்:- 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததற்குப் பிறகு அதற்குரிய விளக்கத்தை நான் தருகிறேன்.
கேள்வி:- ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உங்களை தற்போது சந்தித்து பேசியுள்ளாரே?.
பதில்:- சந்திரபாபு நாயுடு பல நேரங்களில் சந்தித்து பேசியுள்ளார். ஏற்கனவே, சென்னை அறிவாலயத்திற்கு வந்து தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய கருத்துகளை சொல்லியிருக்கின்றார். பல நேரங்களில் பேசிக்கொண்டுதான் இருக்கின்றார்.
கேள்வி:- 23-ந் தேதி நீங்கள் டெல்லிக்கு செல்ல வாய்ப்பு இருக்கின்றதா?.
பதில்:- 23-ந் தேதி கூட்டம் நடக்கவிருப்பதாக யார் சொன்னார்கள் உங்களுக்கு? நீங்களாக செய்தியைப் போட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். தேர்தலின் முடிவென்பதே 23-ந் தேதி மாலைக்குப் பிறகு தான் தெரியப்போகின்றது. அது தெரிந்ததற்குப் பிறகுதான் அதுபோன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்தால் அது பயனுள்ளதாக இருக்கும். அந்த அடிப்படையில் தான் காத்திருக்கின்றோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்னும் மூன்றே நாட்களில் இந்திய மக்கள் எழுதியிருக்கும் தீர்ப்பு வெளிவரப் போகிறது. அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் 2 ஆட்சிகளை மாற்றுவதற்கானத் தீர்ப்புகளை எழுதியிருக்கிறார்கள். ஜனநாயக ரீதியில் மக்கள் எழுதிய தீர்ப்புகளை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படித் திருத்தி எழுதலாம் என ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.
மே 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் தி.மு.க.வின் முகவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மையங்களில் இருக்க வேண்டும். காலதாமதம் என்பதே கூடாது.
தேர்தல் ஆணையத்தின் கைகளைப் பின்பக்கமாக வைத்துக் கட்டியுள்ள மத்திய - மாநில அரசுகள் தங்களின் அதிகார வெறிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நிலை உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு எதிரான மிகக் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும், என்னவெல்லாம் செய்து, தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வெற்றியைத் தடுக்க முடியும் எனத் திட்டமிட்டு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர்.
தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகள், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அவர்கள் கவனம் செலுத்தும் நிலையில் மிகக் குறிப்பாக, கோயம்புத்தூர், ராமநாதபுரம், கரூர், தேனி இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.
எனவே, நமது வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களும், கட்சியின் மாவட்டச் செயலாளர்களும், வேட்பாளர்களும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மிகவும் விழிப்புடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை, ஆளுந்தரப்பு மற்றும் அதிகாரிகளின் மோசடித்தனங்கள் நடைபெறாத வகையில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.