தஞ்சாவூர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது.
இதனை சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், திரைப்பட நடிகையுமான ரோகிணி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை நமக்கு தேவை இல்லாதது. அதை நாம் எதிர்க்க வேண்டும். அதில் உள்ள குழப்பங்களை தெளிவுபடுத்திய பிறகு தான் நிறைவேற்ற வேண்டும். அது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் கண்துடைப்பாகத்தான் நடத்தப்படுகிறது. இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரானது. மாநில உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது.
ஏழை, எளிய குழந்தைகளுக்கு தரமான, சமமான கல்வி கொடுக்காமல் எல்லா நுழைவுத்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் தான் பட்டப்படிப்பு கைகூடும் என்று கூறுவதை ஏற்க முடியாது. இதை எல்லாம் மாணவிகளிடம் விளக்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க வந்துள்ளேன். இதனை எல்லா மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். தமிழக அரசும் வலுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவர் 10 ஆண்டு காலமாக குழந்தைகளுக்கு அவருடைய அறக்கட்டளை மூலம் கல்வி வழங்கி வருகிறார். எனவே குழந்தைகள் எப்படிப்பட்ட சூழ்நிலையில், எங்கிருந்து வருகிறார்கள் என்பது எங்களை விட அவருக்கு நன்றாக தெரியும்.
அதனால் அவர் கூறிய கருத்து உண்மை. அவருக்கு எதிராக பேசுபவர்கள் அதைப்பற்றி சரியாக புரிந்து கொள்ள வில்லை என்று தான் நான் சொல்கிறேன்.
இதை விவாதப்பொருள் ஆக்க வேண்டும். மக்கள் இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது நமது குழந்தைகளை, அடுத்த தலைமுறையினரை பாதிக்க செய்யப்போகிறது. அவர்கள் இதை பேச முடியாது. அவர்களுக்காக நாம் பேச வேண்டும். எனவே இது விவாதப்பொருள் ஆனது சரிதான்.
நுழைவுத்தேர்வு, மும்மொழி கொள்கை, 3-ம் வகுப்பு முதல் பொதுத்தேர்வு என எல்லாமே குழந்தைகளுக்கு அழுத்தம் தருவதாக உள்ளது. அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எதுவும் இல்லை. மத்திய அரசு எல்லாவற்றையும் ஒரே விதமாக கையாள பார்க்கிறார்கள். சமஸ்கிருதம், இந்தி கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறார்கள். இந்துத்துவா சிந்தனைகளை மாணவர்களிடம் பின்வாசல் வழியாக புகுத்த பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.