செய்திகள்

30 தடுப்பணைகள் கட்ட திட்டம்: ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பாலாற்றின் குறுக்கே புதிதாக 30 தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திர அரசின் முயற்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றின் குறுக்கே ஏராளமான தடுப்பணைகளை ஏற்கனவே கட்டியுள்ள ஆந்திர அரசு, அடுத்த கட்டமாக மேலும் 30 தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தவறு என்று தெரிந்தும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களை பறிக்கும் வகையில், சட்டவிரோதமாக தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு தொடர்ந்து முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆந்திராவில் இதுவரை கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் சீரமைக்கப்பட்ட தடுப்பணைகளால் தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களின் பாசன ஆதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இப்போது புதிதாக திட்டமிடப்பட்டுள்ள 30 தடுப்பணைகளும் கட்டப்பட்டால், பாலாற்றில் தமிழகத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.

இதனால் வேலூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாலாற்று தண்ணீரை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது. இப்படி ஒரு துரோகத்தை தமிழகத்திற்கு ஆந்திர அரசு இழைக்கக்கூடாது. ஆந்திர அரசின் இந்த துரோகத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

பாலாற்றின் குறுக்கே புதிதாக 30 தடுப்பணைகளைக் கட்டும் திட்டம் முழுமையான செயல் வடிவம் பெறுவதற்கு முன்பாக அதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக ஆந்திர அரசை கடுமையாக எச்சரிப்பதுடன், புதிய தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகி நீதி பெறவும் தயங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்