கடலூர் முதுநகர்,
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சர்மீரான் (வயது 29). இவர், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் புழல் சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலை தொடர்ந்து, அவர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் அக்டோபர் 3-ந்தேதிக்குள் (அதாவது இன்று) கடலூர் மத்திய சிறையை தகர்த்து, அன்சர் மீரானை கடத்த பயங்கரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் அன்சர் மீரான் சக கைதிகளிடம் நான் 3-ந்தேதி தப்பி சென்று விடுவேன் என்று கூறி வந்தார். இதையடுத்து மாநில உளவுத்துறை போலீசார், சிறைத்துறை அதிகாரிகளை உஷார்படுத்தினர்.
தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். கடலூர் மத்திய சிறையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி சிறையை சுற்றிலும் ரோந்து சென்றபடி கண்காணித்து வருகிறார்கள்.
கைதி அன்சர்மீரானை கடத்த இருப்பதாக வந்த தகவலை அடுத்து, கடலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறைக்குள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். ஆனால் பாதுகாப்பு கருதி காந்தி ஜெயந்தியான நேற்று அந்த போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
மேலும் நாளை (அதாவது இன்று) கைதி அன்சர்மீரானை சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று ஆஜர்படுத்துவது பற்றி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் தலைமையில் சிறைத்துறை அலுவலர்கள், போலீசார் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து அன்சர்மீரானை சென்னைக்கு அழைத்து செல்ல கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
அதன்பிறகு அன்சர் மீரானை சென்னைக்கு அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை தடுக்க என்ன செய்வது என்றும் போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர். இதனால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இதற்கிடையில் இந்த சிக்கலை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்வது குறித்து சிறைத்துறை உயர்அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கைதி அன்சர் மீரானை, நேரில் ஆஜர்படுத்தாமல், அவரின் முழு விவரம் அடங்கிய என்.ஆர். புத்தகத்துடன் காவலை நீட்டிக்க கோர்ட்டில் பரிந்துரை கடிதம் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.