செய்திகள்

உலகைச்சுற்றி...

* ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, 7 வருட தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு கடந்த மாதம் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

* ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ஆப்கான் மற்றும் நேட்டோ படை வீரர்கள் ஒன்றிணைந்து தரைவழியாகவும், வான் வழியாகவும் அதிரடி தாக்குதல்களை நடத்தினர். இதில் தலீபான் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உள்பட 42 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுத கிடங்குகள் நிர்மூலமாக்கப்பட்டன.

* எகிப்தில் 1928-ம் ஆண்டில் முஸ்லிம் அறிஞரும், பள்ளி ஆசிரியருமான ஹசன் அல்பன்னா என்பவரால் நிறுவப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ சமூகம் என்கிற அரசியல் கட்சி பல்வேறு அரபு நாடுகளில் தற்போது முக்கிய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்த கட்சியை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.