திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக திருப்பூர், ஊத்துக்குளி, காங்கேயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடந்தது.
இதில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலிபாளையம், மங்கலம், இடுவாய், தொரவலூர், ஈட்டிவீரம்பாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், பெருமாநல்லூர், பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, வள்ளிபுரம் ஆகிய 13 பஞ்சாயத்துகள் உள்ளன.
இதில் 114 வார்டு உறுப்பினர், 13 பஞ்சாயத்து தலைவர், 8 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதற்காக 115 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் 154 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
தேர்தல் முடிவடைந்த பிறகு ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து அங்கு அதிகாரிகள் முன்னிலையில் ஒரு அறையில் வாக்குப்பெட்டிகள் தனித்தனியாக பிரித்துவைக்கப்பட்டு, அந்த அறைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் இருந்தே வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் விடிய, விடிய காத்து நின்று தேர்தல் முடிவுகளை அறிந்துசென்றனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து, வெற்றி பெற்றவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 154 வாக்குப்பெட்டிகளும் நேற்று ஜெய்வாபாய் பள்ளியில் இருந்து தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டது.
இந்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் மறுஉத்தரவு வரும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.