ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி பெறப்படும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.
தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் 15-ந் தேதி முதல் பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு வரத்து இல்லாததால் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 17.97 அடியாக பதிவானது. வெறும் 108 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும்தான் இருப்பில் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு மட்டும் வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.