பூந்தமல்லி,
ஓசூரில் இருந்து கோயம்பேடு நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. பயணிகள் இறங்கி சென்றதும், பஸ் கண்டக்டர் ஆனந்தன், பயணிகள் யாராவது பொருட்களை தவறவிட்டு சென்றார்களா? என்று பஸ் இருக்கைக்கு அடியில் சோதனை செய்தார்.
அப்போது அங்கு இருந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் ஒரு செல்போன், துப்பாக்கி மற்றும் கவரிங் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அந்த பையை ஒப்படைத்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பையிலிருந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபரை விசாரணைக்கு அழைத்தனர்.
விசாரணையில், அந்த பை அண்ணாநகர் மேற்கு விரிவு, பாடி புது நகரை சேர்ந்த வாசு (வயது 30) என்பவருடையது என்பது தெரியவந்தது. வேலூரில் இருந்து இந்த பஸ்சில் பயணம் செய்தபோது, கோயம்பேடு வந்தடைந்ததும் பையை மறந்து வைத்து சென்றது தெரியவந்தது.
மேலும் அவர் கொண்டு வந்தது பொம்மை துப்பாக்கி என்றும், தனது பிள்ளைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இவர் மீது ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்று உள்ளது. இதையடுத்து அவரிடம் கோயம்பேடு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். பொம்மை துப்பாக்கியுடன் பஸ்சில் பயணம் செய்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.