செய்திகள்

மாநில எல்லைகளில் அமைச்சர் ஷாஜகான் திடீர் ஆய்வு

புதுவை மாநில எல்லைகளில் அமைச்சர் ஷாஜகான் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநில எல்லைகள் கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டது. அதேபோல் 80-க்கும் மேற்பட்ட சிறுவழிப்பாதைகளும் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கோரிமேடு, மதகடிப்பட்டு, முள்ளோடை ஆகிய எல்லைகளில் எடுக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளை அமைச்சர் ஷாஜகான் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் வருவாய், காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

கோரிமேடு எல்லையில் ஆய்வு செய்தபோது அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது:-

வெளிமாநிலத்தில் இருந்து அதிகம் பேர் வருவதால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் எல்லைகளில் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். இன்று (நேற்று) எல்லைப்பகுதிகளில் கட்டுப்பாடு எவ்வாறு உள்ளது என்பது குறித்து நானும், மாவட்ட கலெக்டரும் ஆய்வு மேற்கொண்டோம். இன்னும் சில தினங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும். மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எவ்வளவு நாட்கள் என்பது தெரியாது.

அதேபோல் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக புதுச்சேரிக்கு வரும் வெளிமாநிலங்களை சேர்ந்த மக்களை அனுமதிக்க வேண்டாம். மருத்துவ காரணங்களுக்காக வரும் வெளிமாநில மக்கள் உரிய இ-பாஸ் அனுமதி பெற்று வர வேண்டும். உரிய மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அவர்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...