வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி மத்திய பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனின் அறையில் இருந்து கடந்த மாதம் செல்போன் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டு, சிறையில் அளிக்கப்பட்ட சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது.
இதனை கண்டித்தும், தனி அறையில் இருந்து மாற்றக்கோரியும் முருகன் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகனுக்கு ஆதரவாக அவருடைய மனைவி நளினியும் கடந்த 26-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர் உண்ணாவிரதத்தில் இருவரின் உடல்நிலையும் மோசமானது. ஜெயில் அதிகாரிகளின் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் நளினி கடந்த 5-ந் தேதியும், முருகன் 6-ந் தேதியும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் முருகன் தனி அறையில் இருந்து பழைய அறைக்கு மாற்ற வேண்டும் அல்லது சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஜெயில் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டதால் கடந்த 11-ந் தேதி முதல் மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் முருகனை அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் சந்திக்க அனுமதிக்கக்கோரி, அவருடைய உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் நளினி மற்றும் உறவினர்கள் முருகனை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட அவருடைய வழக்கறிஞர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினர். இதனை நேற்று முன்தினம் சிறை அதிகாரிகள் முருகனிடம் தெரிவித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டார்.
இந்த நிலையில் முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று வேலூருக்கு வந்தார். அவர் மதியம் 12 மணியளவில் வேலூர் சிறையில் உள்ள முருகனையும், தொடர்ந்து 12.45 மணிக்கு பெண்கள் சிறையில் உள்ள நளினியும் சந்திந்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி அறிவுறுத்தியதை முருகனிடம் எடுத்து கூறினேன். அதைத்தொடர்ந்து அவர் 12.30 மணியளவில் இளநீர் குடித்து 6 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். வேலூர் சிறையில் தனி அறையில் அடைக்க கூடாது, பரோல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சிறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. எனவே சிறை நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கைகளை கோர்ட்டு மூலம் சட்டரீதியாக சந்திக்க முருகன் முடிவு செய்துள்ளார். முருகன் உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றதை நளினியிடம் தெரிவித்தேன் என்று கூறினார்.