சேலம்,
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வை திரும்ப வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் செமஸ்டர் தேர்வுக்கான பதிவு புறக்கணிப்பை மாணவர்கள் தற்போது கையில் எடுத்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது சிலர் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு பயங்கர ஆயுதங்களுடன் ஆசிரியர்கள், மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் பலர் பலத்த காயம் அடைந்தனர்.
இதை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாணவர் அணி அமைப்பாளர் அருண்பிரசன்னா தலைமை தாங்கினார்.
இதில் டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் தமிழரசன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் சரவணன், நிர்வாகிகள் ஜெகன், கோபி, வெங்கடேஷ், மதன், மாணவர் அணி நிர்வாகிகள் பார்த்திபராஜா, பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.