காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், காரைக்கால் கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா அகமது தலைமை தாங்கினார். த.மு.மு.க. மாநில செயலாளர் அப்துல் ரகிம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது காஷ்மீர் மாநில தனி அந்தஸ்து சட்டம் 370 மற்றும் 35-ஏ பிரிவு நீக்கம், முத்தலாக் தடை சட்டம், என்.ஐ.ஏ. போன்ற சட்டங்களை நிறைவேற்றி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய பா.ஜனதா அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து அருகில் இருந்த பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடும் நோக்கத்தில் ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து ஊர்வலமாக சென்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, முற்றுகைப்போராட்டத்திற்கு தடை விதித்தனர்.
அதை மீறி த.மு.மு.க.வினர் செல்ல முயற்சித்தபோது, அவர்களை போலீசார் கைது செய்தனர். 48 த.மு.மு.க. வினரை காரைக்கால் தெற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து தலைமையிலான நகர போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.