புதுச்சேரி,
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த தேர்தலை நடத்தக்கோரி சட்டசபையை முற்றுகையிடப்போவதாக பாரதீய ஜனதா கட்சி அறிவித்திருந்தது.
இதன்படி நேற்று அவர்கள் புதுவை மிஷன் வீதி மாதா கோவில் அருகே கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலம் ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியினர் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.