செய்திகள்

உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை - ஆஸ்பத்திரிகளில் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்

ஆஸ்பத்திரிகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:-

தற்போது, இறந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, உடல் வெட்டப்படுகிறது. இதனால், இறந்தவர்களின் உறவினர்கள் வேதனைப்படுகிறார்கள்.

ஆகவே, உடலை கண்ணியமாக நடத்தும் வகையில், இறந்தவரின் உடலை கூறு போடாமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பத்தை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட்டாக உருவாக்கி வருகிறார்கள். இதற்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரூ.5 கோடி கொடுத்துள்ளது. இந்த பணி முன்னேறிய கட்டத்தில் இருக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே முதல் முறையாக இந்தியாவில்தான் இத்தகைய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகப்போகிறது. இதற்கு மெய்நிகர் பிரேத பரிசோதனை என்று பெயர். இன்னும் 6 மாதங்களில் இது நடைமுறைக்கு வரும். முதலில், டெல்லி எம்ய்ஸ் ஆஸ்பத்திரியிலும், பிறகு மற்ற ஆஸ்பத்திரிகளிலும் இந்த தொழில்நுட்பம் பின்பற்றப்படும். இதற்காக டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

வழக்கமான பிரேத பரிசோதனைக்கு இரண்டரை மணி நேரம் ஆகும். ஆனால், இந்த புதிய பிரேத பரிசோதனையை அரை மணி நேரத்தில் முடித்து விடலாம். நேரம் மிச்சமாவதுடன், செலவும் மிச்சமாகும். பிரேத பரிசோதனை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எதிர்கால ஆய்வுக்காக டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து