செய்திகள்

அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் மீது இன்று விசாரணை - சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அறையில் நடக்கிறது

அயோத்தி வழக்கின் மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணை நடக்கிறது. இது நீதிபதிகளின் அறைக்குள்ளேயே நடத்தப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வந்த ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதில், சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய நீதிபதிகள், முஸ்லிம்களுக்கு மசூதி கட்டுவதற்கு தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பை பெரும்பாலான தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். எனினும் ஒரு சில பிரிவினர் இந்த தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுக்கள் தொடரப்பட்டு உள்ளன. அந்தவகையில், இந்த வழக்கில் ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தவர்கள் மற்றும் 3-ம் தரப்பினர் சார்பில் 18 மனுக்கள் தொடரப்பட்டன. இதில் முக்கியமாக அகில பாரத இந்து மகாசபா மற்றும் உத்தரபிரதேச ஜாமியத் உலமா இ-ஹிந்த் தலைவர் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் முக்கியமானவை ஆகும். இந்த 18 மனுக்களில் 9 மனுக்கள் ஏற்கனவே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்திருந்தவர்கள் சார்பில் தொடரப்பட்டவை.

இந்த மனுக்கள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த விசாரணை திறந்த கோர்ட்டில் இல்லாமல் நீதிபதிகளின் அறையிலேயே நடக்கிறது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் விசாரிக்கின்றனர்.

இதில் நீதிபதி சஞ்சீவ் கன்னாவை தவிர மற்ற 4 பேரும் கடந்த 9-ந்தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்று இருந்தவர்கள் ஆவர். அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு பதிலாக நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்த அமர்வில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்