மும்பை
பங்குகள் வேண்டி பல மடங்கு விண்ணப்பம் வந்து குவிந்த நிலையில் பாலிகேப் இந்தியா நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு அமோக வெற்றி பெற்று இருக்கிறது.
விரிவாக்க நடவடிக்கை
ஒயர் மற்றும் கேபிள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பாலிகேப் இந்தியா நிறுவனம் பாலிகேப் பிராண்டின் கீழ் மின் உபகரணங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் வகையில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது.
இவ்வெளியீடு கடந்த 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி நேற்று நிறைவடைந்தது. அதில் ரூ.400 கோடி வரையிலான மதிப்பிற்கு புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. அது தவிர ஏறக்குறைய சுமார் 1.76 கோடி அளவிற்கு நிறுவனர்கள் மற்றும் பங்குதாரரின் பங்குகளும் வெளியிடப்பட்டது. ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.533-538-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
மொத்தம் 1,76,37,777 பங்குகள் சந்தைக்கு வந்த நிலையில், நேற்று மாலை 5.15 மணி நிலவரப்படி 91,31,19,264 பங்குகளுக்கு தேவைப்பாடு இருந்தது. வெளியீட்டு அளவை விட இது சுமார் 52 மடங்கு அதிகமாகும். எனவே பங்கின் அதிகபட்ச விலை (ரூ.538) அடிப்படையில் இந்நிறுவனம் ரூ.1,345 கோடி திரட்டிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியை இந்நிறுவனம் தனது பழைய கடன்களை திரும்பச் செலுத்துதல், நடைமுறை மூலதன தேவைகள் மற்றும் இதர பொது நோக்கங்களுக்காக பயன்படுத்த உள்ளது.
பாலிகேப் இந்தியாவின் வெளியீட்டில் 1.75 லட்சம் பங்குகள் நிறுவன பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன. அவர்களுக்கு பங்கின் இறுதி வெளியீட்டு விலையில் ரூ.53 தள்ளுபடி சலுகை அளிக்கப்பட உள்ளது.
கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் கம்பெனி, ஆக்சிஸ் கேப்பிட்டல், சிட்டிகுரூப் குளோபல் மார்க்கெட்ஸ் இந்தியா, ஐ.ஐ.எப்.எல். ஹோல்டிங்ஸ் மற்றும் யெஸ் செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் பாலிகேப் இந்தியா நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை நிர்வகிக்கின்றன. இந்நிறுவனத்தின் புதிய பங்குகள் விரைவில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.
வருவாய், லாபம்
2015-16 முதல் 2017-18 வரையிலான காலத்தில் பாலிகேப் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் 14.31 சராசரி வளர்ச்சி கண்டு வந்திருக்கிறது. இதே காலத்தில் மொத்த லாபம் மற்றும் நிகர லாபம் முறையே சராசரியாக 23.82 சதவீதம் மற்றும் 41.71 சதவீதம் உயர்ந்து வந்துள்ளது.