பெங்களூரு,
இந்தியா முழுவதும் நேற்று சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல, கர்நாடக மாநிலத்திலும் சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது. தலைநகர் பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கவும், விளைபொருட்களுக்கு தகுந்த விலை கொடுக்கவும், இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படும் முறை இன்னும் பலப்படுத்தப்படும்.
விளைபொருட்களை சேமித்து வைக்க கிடங்கு வசதி, விலை குறையும்போது, விளைபொருட்களை கொள்முதல் செய்வது, ஆதரவு விலை வழங்கப்படும். கிராமப்புறங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நகர்மயமாதல் வேகமாக நடந்து வருகிறது. வேலை மற்றும் பிற பணிகளுக்காக நகரங்களை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இதனால் நகரங்களில் அடிப்படை வசதிகள் அதிகளவில் செய்து கொடுக்கப்படும். நகரங்களின் வளர்ச்சியை திட்டமிட்டு கட்டுப்படுத்துவது மிக முக்கியமாகும்.
இந்த நோக்கத்தில் பெங்களூரு உள்பட மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க புதிய திட்டம் வகுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க முக்கியத்துவம் கொடுப்போம். திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது அமலில் உள்ள தொழில் கொள்கை வருகிற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தொழில் கொள்கையை உருவாக்க முடிவு செய்துள்ளோம். 2, 3-வது நகரங்களில் தொழில் முதலீட்டுகளை ஈர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படும். 9 மாவட்டங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள தொழிற்பேட்டைகள், பிற மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படும்.
புதிய ஜவுளி கொள்கை உருவாக்கப்படும். கர்நாடகத்தில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி தலைமையில் ஒரு செயலாக்க படை அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவை முழுமையாக வளர்ச்சி அடைய செய்ய, பெங்களூரு செயலாக்க படை மேலும் பலப்படுத்தப்படும்.
பெங்களூருவை இந்தியாவின், சிலிக்கான் பள்ளத்தாக்காக ஆக்குவது தான் எனது நோக்கம். உண்மையான உணர்வின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். கலிபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ போல் பெங்களூரு வளர்ச்சி அடைய வேண்டும். இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகத்தின் பங்கு 30 சதவீதம் ஆகும். இந்த தகவல் தொழில்நுட்ப துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளேன். மின் உற்பத்தியில் கர்நாடகம் தன்னிறைவு அடைந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. இதை தொடர்ந்து பாதுகாத்து கொள்வோம். தொழில் நிறுவனங்கள், விவசாயத்திற்கு தேவையான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமுதாயத்தில் அனைத்துதரப்பு குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோரின் பங்களிப்பு நன்றாக இருந்தால் தான் அரசு பள்ளிகளுக்கு அதிக பலம் கிடைக்கும் என்பதை நான் நம்புகிறேன். வேலை வாய்ப்புக்கு ஏற்ற கல்வியை உருவாக்க அரசு தயாராக உள்ளது.
போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, குற்றங்களை குறைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். தாலுகா மற்றும் மாவட்ட அளவிலேயே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நான் முதல்-மந்திரி பதவியில் அமர்ந்து, ஒரு வாரத்திற்குள், வறட்சி, வெள்ளம் வந்துவிட்டது. நாம் அனைவரும் சேர்ந்து மாநிலத்தை கட்டமைப்போம். கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்வோம்.