வேலூர்,
வேலூர் காகிதப்பட்டறை உழவர்சந்தை எதிரே உள்ள மலையடிவாரத்தில் (டான்சி பின்புறம்) 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இப்பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் நேற்று முன்தினம் பெய்த மழைநீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதியில் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதனால் அவர்கள் நேற்று காலை ஆற்காடு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். எனவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைகாலங்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரும் செல்ல வழியில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்து விடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.
போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, சம்பவ இடத்துக்கு வேலூர் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் திவ்யபிரனவ், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பொதுமக்கள் சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.