பென்னாகரம்,
பென்னாகரம் ஒன்றியம் மஞ்சநாயக்கனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட பெரிய கடமடை, சின்னகடமடை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி அளிப்பு திட்டத்தில் வேலை வழங்குவது இல்லை என கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று மாற்றுத்திறனாளிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருவூரான், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரஜினி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பென்னாகரம் பகுதி குழு உறுப்பினர் இடும்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அவர்கள் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாரத்தில் 3 பேருக்கு மட்டும் 2 நாட்கள் வேலை வழங்குகின்றனர். மற்ற நாட்களில் வேலை வழங்குவது இல்லை. மேலும் நாங்கள் வேலை செய்தது போல் எங்களது பணி அட்டையில் கணக்கு வைத்து அவர்களாகவே பணத்தை முழுவதும் பெற்று கொள்கின்றனர். இதனால் நாங்கள் வாழ்வாரத்தை இழந்துள்ளோம். எனவே அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.