புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நேரு வீதி பெரிய மார்க்கெட்டில் இயங்கி வந்த காய்கறி கடைகள் தொற்று பரவலை குறைப்பதற்காக புதுவை புதிய பஸ் நிலையத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி மாற்றப்பட்டது.
அதன்பின்னர் புதுவையில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் புதிய பஸ் நிலையத்தில் இயங்கிவந்த காய்கறி கடைகள் கடந்த 3-ந் தேதி முதல் மீண்டும் பெரிய மார்க்கெட்டிற்கு மாற்றப்பட்டது. இதனால் பெரிய மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. முக கவசம் அணிவது இல்லை. அரசின் உத்தரவுகளை பின்பற்றுவது இல்லை என பல்வேறு புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் அங்கிருந்து கடைகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் கவர்னர் கிரண்பெடியும் காரில் சென்று மார்க்கெட்டிற்கு வெளியே இருந்து ஆய்வு செய்தார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பெரிய மார்க்கெட், காந்தி வீதியில் நடந்துவந்த மீன்கள் ஏலம் விடும் பணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்றப்பட்டது. அதேபோல் பெரிய மார்க்கெட்டில் இயங்கி வரும் காய்கறி கடைகளை ஏ.எப்.டி. மைதானத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனதெரிகிறது.
இதற்கிடையே புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி. மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு தேங்கி கிடக்கும் கழிவுகளை லாரிகளில் ஏற்றி நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.