சங்லாங்,
அருணாச்சல பிரதேசத்தில் மக்களவை தேர்தலோடு, மாநில சட்டமன்றத்துக்கும் வரும் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, அருணாச்சல பிரதேசத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அங்குள்ள சங்லாங் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா கூறியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பாஜக உறுதி பூண்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிய பாஜக திடமாக உள்ளது. பாஜக ஆட்சி அமைத்தால், அருணாச்சல பிரதேசத்தில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று மோடி எங்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் அருணாச்சல பிரதேசத்தில் அமைதியின்மை நிலவியது. எந்த வளர்ச்சியும் இல்லாத சூழல் நிலவியது. அருணாச்சல பிரதேசத்தில் அமைதியைக்கொண்டு வந்துள்ள பாஜக வளர்ச்சிக்கு வழியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள அனைத்து இடங்களும் தற்போது வான் மற்றும் ரயில் இணைப்பை பெற்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்திற்கு மட்டும் வளர்ச்சி பணிகளுக்காக மத்திய அரசு ரூ.50 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய், வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, தற்போது, பிரதமர் மோடிதான் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் முதல் கன்னியாகுமரி வரை, அசாம் முதல் குஜராத் வரை என அனைத்து இடங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும். பாஜக வெற்றியின் தொடக்கம் அருணாச்சல பிரதேசத்தில் இருந்துதான் துவங்க உள்ளது என்றார்.
அருணாச்சல பிரதேசத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுவது இதுதான் முதல் முறையாகும். எங்களின் வெற்றி இங்கிருந்தே துவங்கி விட்டது. எங்கள் கட்சியை சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏக்களாக தேர்வு செய்யப்பட்டு விட்டனர் என்றார்.