செய்திகள்

பா.ஜ.க. அரசு துறைகளை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துகிறது ராசிபுரத்தில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி

பா.ஜ.க. அரசு துறைகளை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்துகிறது என ராசிபுரத்தில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

தினத்தந்தி

ராசிபுரம்,

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து தேர்தல் பணியாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று ராசிபுரத்தில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் கதிர்வேல், எம்.கே.காந்தி என்கிற பெரியண்ணன், ஆனந்தகுமார், நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு செல்லும் இடமெல்லாம் பெரும் வரவேற்பு உள்ளது. எனவே தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் விசைத்தறி தொழில் அதிகம் உள்ளது. விசைத்தறி தொழிலுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசின் தவறான பொருளாதார கொள்கையால், விசைத்தறியாளர்கள் பெற்ற கடனை செலுத்த முடியவில்லை. இதனை தள்ளுபடி செய்யவும் அனைத்து முயற்சியும் எடுப்போம்.

பொள்ளாச்சி சம்பவத்தில் காவல்துறை எப்படி நடந்து கொண்டது என்பது மக்களுக்கு தெரியும். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக இருப்பதால், அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவை தன்னாட்சி அதிகாரம் கொண்டவை. பா.ஜ.க. இவற்றை தேர்தல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றது.

எப்போது எந்த மாநிலத்தில் தேர்தல் வந்தாலும், அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் மீது சோதனை நடத்துவதை பா.ஜ.க. வாடிக்கையாக கொண்டு உள்ளது. தேர்தல் ஆணையம் தேவையானவர்களுக்கு சின்னம் கொடுக்கிறார்கள். ஆனால் எதிர்கட்சியாளர்களுக்கு கேட்கும் சின்னம் கொடுப்பதில்லை. தேர்தல் ஆணையத்தை கூட பா.ஜ.க. மிரட்டுகிறது. அனைத்துத்துறை அதிகாரிகளை, நேர்மையானவர்களை மிரட்டுகிறார்கள். இதனால் நேர்மையான அதிகாரிகள் பலர் தொடர்ந்து பதவி விலகி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், தலைமை கழக பேச்சாளர் தமிழ் மன்னன், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி ஒன்றிய, நகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாமக்கல் நாடாளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். இதற்கிடையே நேற்று வேட்பாளர் சின்ராஜ் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது